“கோவை திராவிட இயக்கத்தின் கோட்டை” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் சுய மரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு கோவையில் இன்று(ஏப்.27) நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “ சுய மரியாதை மாநாட்டில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. சரியான இடத்தில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. கோவை திராவிட இயக்கத்தின் கோட்டை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இங்குதான் திரை வாழ்க்கையை தொடங்கினார். சுய மரியாதை மாநாட்டுக்கு பொருத்தமான பகுதி கோவை.
கோவையில் பல பகுதிகளில் கருப்பு சட்டை அணிந்த இளைஞர்களை பார்த்தது மகிழ்ச்சி. 13 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்தவர் பெரியார்.10,070 பொது கூட்டத்தில் பேசியவர் அவர். தமிழ்நாட்டின் அரசியலை இன்றும் தீர்மானிப்பவர் பெரியார். பெரியாரின் கொள்கை பேரனாக இந்த மேடையில் நிற்பது பெருமை. பெரியாரின் கொள்கைகள் ஒவ்வொன்றாக வெற்றி பெற்று வருகிறது. சட்டமாகவும் மாறி வருகிறது.
திமுக ஆட்சியில் மகளிரும் ஆண்களுக்கு நிகராக தொழில் முனைவோராக மாறி வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் திமுகவை வீழ்த்த நினைக்கும் பாஜக-வின் கனவு எப்போதும் நிறைவேறாது. புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி கொண்டு வந்தார்கள். இன்றைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு. விதை போட்டது தமிழ்நாடு.
தற்போது பாஜக-விடம் விழுந்து கிடக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மாநில உரிமைகளை மதச்சார்பின்மை பாதுகாக்க போராடி வருகிறோம். இதற்கு 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். திராவிட பாசறை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 200 - க்கும் அதிகமான தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெரும். அதற்கு கோவையில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெற்றாக வேண்டும்”
இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.