மது போதையில் அடுப்பு அருகே பெட்ரோலை மாற்றிய போது விபரீதம்! லாரி ஓட்டுநர்கள் 3 பேர் உயிரிழப்பு!
கோவை சூலூர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த முத்துகவுண்டன் புதூர் பகுதியில் தர்மராஜா
என்பவருக்கு சொந்தமான வீட்டில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெட்ரோல் டேங்கர்
லாரி ஓட்டுநர்கள் அழகுராஜா, முத்துக்குமார், தினேஷ், வீரமணி பாண்டீஸ்வரன்
மற்றும் வாகராயன்பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மனோஜ்,
சின்னகருப்பு ஆகிய 7 பேர் தங்கியுள்ளனர். இதில் லாரி ஓட்டுநர்கள் ஐவரும்
இருகூர் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்குகளில் இருந்து பல்வேறு மாவட்டங்களில்
உள்ள எரிபொருள் நிரப்பு மையங்களுக்கு எரிபொருட்களை டேங்கர் லாரி மூலம் கொண்டு சேர்க்கும் பணியினை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் தங்களுக்கு இருசக்கர வாகனத்திற்கு தேவையான பெட்ரோலை அவர்களது லாரியில் இருந்து மீதமாகியதை எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் அவ்வப்போது பெட்ரோலை திருடி வீடுகளில் வைத்து குறைந்த விலைக்கு விற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விபத்து வழக்கு ஒன்றில் சிக்கிய ஓட்டுனர் அழகுராஜா நேற்று விசாரணைக்காக கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினரிடம் ஆஜராகி விட்டு வீடு திரும்பியுள்ளார்.
இதனைதொடர்ந்து வீட்டிலிருந்த பாண்டீஸ்வரன் அடுப்பறையில் சமையல் செய்து கொண்டிருந்தோடு அழகுராஜா, பாண்டியராஜன் உட்பட 5 பேர் மது அருந்தி உள்ளனர். இந்நிலையில், நள்ளிரவு 12 மணி அளவில் மது போதையில் இருந்த அழகுராஜா, இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் என, வீட்டிலிருந்த 10 லிட்டர் பெட்ரோல் கேனை எடுத்து எரியும் அடுப்பில் அருகே வைத்து ஒரு லிட்டர் கேனுக்கு மாற்றி உள்ளார்.
இதையும் படியுங்கள் : நேபாளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள் – 3நாட்களுக்கு பின் 11 உடல்கள் மீட்பு!
இதனை சமையல் செய்து கொண்டிருந்த பாண்டீஸ்வரன் தடுக்க முயற்சி செய்தும், அலட்சியமாக பெட்ரோலை மாற்றியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அடுப்பில் இருந்த தீ பரவி, பெட்ரோல் கேனில் பற்றியது. அப்போது பெட்ரோல் கேனை கீழே போட்ட போது அந்த அறை முழுவதும் தீ பரவியது. மேலும் சிலிண்டரும் அப்போது வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் அறையில் இருந்த 7 பேருக்கும் தீ பிடித்து உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதில் சம்பவ இடத்திலேயே அழகுராஜா, சின்னக்கருப்பு, முத்துக்குமார் ஆகிய மூவர் உயிரிழந்தனர்.
அறையின் கதவு மூடப்பட்டிருந்த நிலையில், கதவை திறந்து படுகாயங்களுடன் வெளியே வந்த இளைஞர்களின் அலறலை கேட்டு, அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை
அணைக்க முயன்றனர். ஆனால், தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர், இந்த தீ விபத்து தொடர்பாக பொதுமக்கள் சூலூர் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் படுகாயம் அடைந்த
தினேஷ், வீரமணி, மனோஜ், பாண்டீஸ்வரன் ஆகிய நால்வரையும் மீட்டு கோவை அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.மேலும் உயிரிழந்த மூவரது
உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சூலூர் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.