#Delhi-ல் ரூ.2000 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்!
மேற்கு டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 200 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக கடத்த பலரும் விமான சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தவிர்க்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. இதன் காரணமாக விமான பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் கடந்த மாதம் 29ம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணி ஒருவரிடமிருந்து ரூ.24.9 கோடி மதிப்பிலான சுமார் 1.6 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, டெல்லி முழுவதும் போதைப்பொருள் தொடர்பான சோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனையின் போது கடந்த அக். 2ம் தேதி சுமார் 500 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 2000 கோடி மதிப்பில் அடங்கும். இது தொடர்பாக டெல்லி போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், மேற்கு டெல்லியின் ரமேஷ் நகரில் 200 கிலோவுக்கும் அதிகமான ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள கொக்னைன் கைப்பற்றப்பட்டதாக சிறப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் லண்டனுக்கு தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் போதைப் பொருள் தொடர்பான விவரங்கள் விசாரணையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.