தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் - அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...!
அரசு முறை பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil Nadu Investors First Port of Call) கலந்துகொண்டு, தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து முதலமைச்சர் உரையாற்றினார். பிப். 07 ஆம் தேதி முதலமைச்சர் தமிழ்நாடு திரும்ப உள்ளார்.
இதையும் படியுங்கள் ; திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!
தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்.12-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் பிப்.19-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முக்கிய விவரங்கள் மற்றும் நிதிநிலை அறிக்கை ஆகியவை குறித்து நிதித்துறை முதன்மைச் செயலாளர், வளர்ச்சித்துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.