உத்தரகண்ட்டை உலுக்கிய மேக வெடிப்பு - பெரும் வெள்ளப்பெருக்கால் தத்தளிக்கும் கிராமங்கள்!
உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஹர்சில்-தாராலி பகுதியில், கீர் கங்கை (Kheer Ganga) ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த திடீர் மேக வெடிப்பால், கீர் கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, அருகிலுள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் சுமார் 20 முதல் 25-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என உள்ளூர்வாசிகள் அஞ்சுகின்றனர்.
மேலும், 10 முதல் 12 பேர் வரை வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த துயரமான நிகழ்வு குறித்து தகவல் அறிந்தவுடன், மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.மாநிலப் பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF), இந்திய ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ITBP) ஆகிய பல குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, இந்த நிகழ்வு குறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதலமைச்சருடன் தொலைபேசியில் பேசி, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
இந்த மேக வெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, அந்தப் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால், மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.