இந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழா - டிடி தமிழ் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட #DMK மாணவரணியினர் கைது!
இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகம் முன்பாக திமுக மாணவரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ இன் பொன் விழாவோடு இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்கிறார். டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடத்தப்படும் சம்பவம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், இந்தி மாதம் நிறைவு நாள் விழா கொண்டாடப்படுவது வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதற்கிடையே, டிடி தமிழ் தொலைக்காட்சியில் நடைபெறும் இந்தி மாத நிறைவு விழா கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என திமுக மாணவரணி சார்பில் அதன் தலைவர் ராஜீவ்காந்தி மற்றும் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில், "சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சியின் பொன் விழாவோடு இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை டிடி தொலைக்காட்சி அலுவலகம் முன்பு திமுகவின் மாணவரணியினர் அதன் தலைவர் ராஜீவ்காந்தி மற்றும் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் திரண்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.