For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நெருங்கிய கோப்பையும்; நொறுங்கிய இதயமும் - சொன்னதை செய்துகாட்டிய பாட் கம்மின்ஸ்!

10:16 AM Nov 20, 2023 IST | Web Editor
நெருங்கிய கோப்பையும்  நொறுங்கிய இதயமும்   சொன்னதை செய்துகாட்டிய பாட் கம்மின்ஸ்
Advertisement

யுத்தக்களத்தில் நிசப்தம் எப்போது நிகழும் தெரியுமா?

Advertisement

வெற்றிக்கு பின்பான பெருமூச்சு விடும் போது தான்.  அதற்கு முன் நிகழும் யுத்தத்தில் பலம் மற்றும் பலவீனம் என்பது,  இரு வேறு படைகளின் புத்திசாலித்தனத்தை பொறுத்தே வெளிப்படுகிறது.  ஆனால் சரித்திர நிகழ்வுக்காக காத்துக் கொண்டிருந்த அகமதாபாத் மைதானம்,  யுத்தத்தின் போதும்,  யுத்தத்தின் பிறகும் நிசப்தமாக மட்டுமே இருந்தது.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி,  மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்து முடிந்திருக்கிறது. 2003ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில்,  இந்தியாவை துவம்சம் செய்த ஆஸ்திரேலிய அணியை,  நடப்பு தொடரில் இந்தியா பழி தீர்க்கும் எனும் அபார நம்பிக்கையுடன் இந்திய அணி எதிர்கொண்டது.

ஆரவாரத்துடன் தொடங்கிய போட்டி,  இந்திய ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்தாலும்,  அந்த உற்சாகம் 9.4 ஓவர்களில் கேப்டன் ரோகித் சர்மா வெளியேறியதோடு களைத்துப் போனது.  ஏமாற்றத்துடன் வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயருக்கு பிறகு வந்த கே.எல்.ராகுல் மற்றும் களத்தில் நின்று கொண்டிருந்த கோலி, என இருவரின் பர்ட்னர்ஷிப், இந்திய அணியின் ஸ்கோரை நத்தை போ நகர செய்தனர்.

ஸ்லோ விக்கெட் பிட்ச் என்பதால்,  அதை நன்கு புரிந்திருந்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ்,  தனது அணியின் உற்சாகத்தை கட்டுக்குள் வைத்திருக்க,  ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக ஆடுகளமும் ரியாக்ட் செய்ய தொடங்கியது.  தொட்டதெல்லாம் தொட்டபடியே ஆடிய இந்திய அணியின் இன்னிங்ஸில்,  கோலியின் விக்கெட்டுக்கு பிறகான ஆட்டம், கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவை நம்பித்தான் தொடர்ந்தது.

ஐபிஎல் போட்டிகளிலும்,  இந்தியாவின் பைலேட்டிரல் தொடர்களிலும்,  360 டிகிரியில் சுழன்று சுழன்று ஆடிய சூர்ய குமார் யாதவ்,  தன் மீதான அழுத்தத்தை சுவிங்கத்தை மென்றுகொண்டே சமாளித்தாலும்,  இந்தியாவின் இக்கட்டான சூழலில் அவர் நிலைக்கவில்லை.  கே.எல்.ராகுல் மட்டுமே நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்திச் செல்ல, மைதானம் முழுவதும் அடங்கியிருந்த நிசப்தம்,  ராகுலின் சிறப்பான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்த பின்னரே கரகோஷங்களை கேட்கச் செய்தது.

நிலைகுலைந்து போன இந்திய அணியின் பேட்டிங்,  ஆஸ்திரேலியாவுக்கு 240 ரன்களை மட்டுமே சவாலாக கொடுக்க,  ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் பந்துவீச்சாளர்களை நம்பியே தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.  ஆனால் அந்த சூழல் அவ்வளவு நேரம் நீடிக்கவில்லை.  நாக் அவுட் போட்டிகள் என்றாலே, அதீத ஃபார்மில் விளையாடும் ஆஸ்திரேலிய அணிக்கே வாய்ப்புகள் கூடியது.

ஆடுகளத்தின் தன்மையை நன்கு புரிந்து வைத்திருந்த ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்கள்,  பொறுப்புடன் ஆடி ஒட்டுமொத்த இந்தியாவின் கனவையும் சிதைத்து விட்டார்கள்.  டிராவிஸ் ஹெட் தனது அதிரடியை ஒருபுறம் தொடர்ந்தாலும்,  மார்னஸ் லபுஷேன் நிதானத்தை கடைபிடித்தார்.  இந்திய பந்துவீச்சு, முயற்சி செய்த அனைத்தும் கை கூடாத நிலையில்,  7 ஓவர்கள் மீதம் வைத்தபடியே, இந்திய அணியின் 240 ரன்கள் இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா,  6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அங்கு தான் ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களும் நொறுங்கி போனது.  தொடர் முழுவதுமாக 9 அணிகளையும் ஒருதலைப்பட்சமாக வீழ்த்திய பின்,  நியூசிலாந்து அணிக்கு 2019 ல் நடந்த சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுத்துவிட்டு,  ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டது இந்திய அணி.  2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், சீனியர்களின் இதயங்களை சுக்கு நூறாக்கிய ஆஸி.க்கு,  தக்க பதிலடி கொடுப்பதை மட்டுமே இந்திய அணியும்,  இந்திய ரசிகர்களும் மனதில் கொண்டிருந்தனர்.

ஐசிசி தொடர்கள் என்றாலே கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து வந்த துரதிர்ஷ்டம், இத்துடன் முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் மட்டுமே பரிசாக கிடைத்திருக்கிறது.  களத்தில் சிங்கமாய் கர்ஜித்த இந்திய வீரர்கள்,  கண்ணீர் மல்க,  சோர்ந்து போன முகத்துடன், கேமராக்களை தவிர்த்து,  டிரெஸ்ஸிங் ரூம் நோக்கி ஒவ்வொருவராக ஓடுவதை பார்க்கவே கடினமாக இருந்தது.  அந்த இரவு,  இந்திய வீரர்களின் பெட்ஷீட் கவர்களை, நிச்சயம் கண்ணீரால் மட்டுமே நனைத்திருக்கக் கூடும்.

உற்சாகத்தில் திளைத்த ஆஸ்திரேலியா,  வரலாறை மேலும் வலுப்படுத்திக் கொண்டது. இதுவரை 8 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் ஆஸ்திரேலியா, 6 முறை உலகக் கோப்பை வென்று,  நெருங்க முடியாத உயரத்தை தொட்டிருக்கிறது.  "Winning the worldcup is not a cup of tea for everyone" என்று சொல்வார்கள்.  பாட் கம்மின்ஸ் ஐ பொறுத்தவரை, அவர் இனி காலம் முழுவதும் பேசப்படும் கேப்டனாக இருப்பார்.

ஆனால் ரோகித் சர்மாவை நினைத்தால் தான் வருத்தம் மேலும் கூடுகிறது. வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா குறித்து பேசிய ஆட்ட நாயகன் டிராவிஸ் ஹெட்,  "இந்த தருணத்தில் மிகவும் அதிர்ஷ்டம் இல்லாத ஒருவர் இருப்பார் என்றால் அது ரோகித் சர்மா மட்டுமே" என குறிப்பிட்டு இருந்தார்.  இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனிக்கு பிறகு, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி,  அனைத்து ஃபார்மேட்களிலும் சிறப்பாக விளையாடினாலும்,  ஐசிசி நிகழ்வுகளில் மட்டும் நினைத்ததை நடத்தி முடிக்க முடியவில்லை.

கோலி மற்றும் ரோகித்துக்கு,  2014 டி20 உலகக் கோப்பை,  2015 உலகக் கோப்பை,  2016 டி20 உலகக் கோப்பை,  2017 சாம்பியன்ஸ் டிராபி,  2019 உலகக் கோப்பை,  2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்,  2022 டி20 உலகக் கோப்பை,  2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என அடுக்கடுக்கான ஏமாற்றங்களின் வரிசையில், 2023 உலகக் கோப்பையும் இணைந்து விட்டது.

இறுதிப் போட்டியின் முடிவுக்கு பிறகு, மைதானம் முழுவதுமாக எழுந்த முணுமுணுப்பு என்ன தெரியுமா? ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ், இந்த போட்டிக்கு முன் என்ன நினைத்து சொன்னாரோ தெரியவில்லை,  "மைதானத்தில் இருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேரை அமைதியாக்குவதையே நாங்கள் திருப்தியாக உணருவோம் என பேசிய கம்மின்ஸ், சொன்னது போலவே செய்து காட்டிவிட்டார்" என்பது தான்.

உண்மைதான்.... கம்மின்ஸ் அமைதியாக்கியது மைதானத்தை மட்டுமல்ல,  ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் தான்... அத்துடன் 140 கோடி மக்களின் இதயங்களும் நொறுங்கிப் போனது....

Advertisement