பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் கிடைத்த பரிசா? ரூ.371 கோடி ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு விடுவிப்பு!
ரூ.371 கோடி ஊழல் வழக்கில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமலாக்கத்துறை (ED) க்ளீன் சிட் வழங்கியுள்ளது.
கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், ஆந்திரப் பிரதேச மாநில திறன் மேம்பாட்டுக் கழகம் (APSSDC)ன் கீழ், மாநிலத்தில் இருக்கும் வேலையற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்படுத்தி வேலை பெற உதவுவதாக கூறி ரூ. 371 கோடி ஊழல் செய்ய சந்திரபாபு நாயுடு உறுதுணையாக இருந்ததாக அப்போது ஆட்சிக்கு வந்த ஒய்எஸ்ஆர்.காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறையும் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்தது. இதனிடையே, இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்.9ஆம் தேதி ஆந்திர மாநில குற்றப்பிரிவு போலீசாரால் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். 50 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு இடைக்கால ஜாமின் பெற்று அக்டோபர் 31, 2023 அன்று வெளியே வந்தார்.
கண்புரை அறுவை சிகிச்சை செய்ய ஜாமீன் தேவை என்று அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்ததால், மருத்துவ காரணங்களுக்காக அக்டோபர் 31, 2023 அன்று அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி ஆந்திர உயர் நீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபடவும் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ஆந்திர மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, பாஜக மற்றும் நடிகர் பவண் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டன. இதில் பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றிய இந்த கூட்டணி சார்பில், சந்திரபாபு நாயுடு முதலமைச்சராகவும், பவன் கல்யாண் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.
இந்நிலையில் ரூ.371 கோடி ஊழல் வழக்கில் திடீர் திருப்பமாக, இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இல்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் சந்திரபாபு நாயுடு விடுவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.