பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - அறிவியல் பாடத்தில் அதிகமானோர் செண்டம் அடித்து அசத்தல்!
தமிழ்நாட்டில் 2024- 25 ஆம் ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி 8,71,239 மாணாக்கர்கள் தேர்வெழுதிய நிலையில், 93.80 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவியர் 95.88 சதவீதமும், மாணவர்கள் 91.74 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 2.25% இந்தாண்டு அதிகரித்துள்ளது. குறிப்பாக எப்போதும்போல் மாணவர்களைவிட மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் 4.14 % அதிகரித்துள்ளது.
மாவட்ட ரீதியான தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை 97.49%-த்துடன் முதலிடத்தில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக விருதுநகர் 95.57%-த்துடன் இரண்டாம் இடத்திலும், கன்னியாகுமரி 95.47%-த்துடன் மூன்றாம் இடத்திலும், திருச்சி 95.42%-த்துடன் நான்காம் இடத்திலும், தூத்துக்குடி 95.40%-த்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
அதே போல் இந்தாண்டு பாட வாரியாக 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் தமிழில் 8 பேரும், அதிகபட்சமாக அறிவியலில்10,838 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 10,256 பேரும், கணிதம் 1992 பேரும், ஆங்கிலம் 346 பேரும் செண்டம் அடித்து அசத்தியுள்ளனர்.
தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் http://www.tnresults.nic.in ஆகிய இணைய தளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.