For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2023-ல் தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நடந்த கருத்து மோதல்கள்!

09:07 PM Dec 30, 2023 IST | Web Editor
2023 ல் தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் இடையே நடந்த கருத்து மோதல்கள்
Advertisement

2023 ஆம் ஆண்டில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நடைபெற்ற கருத்து மோதல்கள் குறித்த முக்கிய அம்சங்களை இங்கு பார்க்கலாம்.

Advertisement

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து அவர் செல்லும் இடங்களிளெல்லாம் நீட், மும்மொழித்திட்டம், புதிய கல்விக்கொள்கை, சனாதனம், திராவிடம் என அவர் பேசிய பேச்சுக்கள் விவாதத்துக்கு உள்ளானது. தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு, முதன் முறையாக சுதந்திர தின விழா வாழ்த்துச் செய்தியில் ஒரு முக்கியமான வரியை குறிப்பிட்டிருந்தார். அந்த வாழ்த்துச் செய்தியில், நீட் தேர்வுக்கு பிறகு தான் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் அதிகளவு சேருவதாக கூறியிருந்தார். இதற்கு தமிழக எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. தமிழக அரசு சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தமிழகம் - தமிழ்நாடு 

2023 ஜனவரி 4ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழ்நாடு என்று அழைப்பதை விட, தமிழகம் என்றால் தான் சரியாக இருக்கும்' என பேசியது விவாதத்துக்கு உள்ளானது. இதனைத்தொடர்ந்து தமிழகம், தமிழ்நாடு என்ற வார்த்தைகள் மிகப்பெரிய சர்ச்சையானது.

சட்டசபையிலிருந்து வெளிநடப்பு

தமிழ்நாடு சட்டசபையின் 16வது கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியபோது, அரசு தயாரித்து கொடுத்திருந்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படித்தார்.  அப்போது சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அமைதிப்பூங்கா முதலான பல்வேறு சொற்களை தவிர்த்துவிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி உரையை படித்தார். இதையடுத்து, ஆளுநருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு அச்சிடப்பட்ட உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என தீர்மானத்தை வாசித்தார். இதனையடுத்து ஆளுநர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். கூட்டம் முடியும் முன்பாகவே அவர் அவையை விட்டு வெளியேறியதால் விதிமுறைகளை மீறியதாக சர்ச்சை எழுந்தது.

ravi: R N Ravi resigns as Naga interlocutor - The Economic Times

திராவிட மாடல் குறித்து விமர்சனம்

ஆளுநர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், திமுக தலைமையிலான, தமிழ்நாடு அரசு கூறி வரும் திராவிட மாடல் குறித்தும் விமர்சித்திருந்தார். அதில் "திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி. திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. அது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே. திராவிட மாடல் கொள்கைகள் 'ஒரே நாடு, ஒரே பாரதம்' கொள்கைக்கு எதிரானது. இந்த கொள்கை சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள், வரலாற்றை மறைக்க பார்க்கிறது" என்று தெரிவித்தார். அதிகாரத்துக்காக மொழியின் அடிப்படையிலும் சாதியின் அடிப்படையிலும் இங்குள்ள கட்சியினர் அரசியல் செய்கின்றனர்; நாட்டு மக்களின் பார்வையைக் குறுக்கிவிட்டனர். தற்போது, திராவிடம் என்றால் தமிழகம் மட்டும் என்று பேசப்பட்டுவருகிறது. ஆனால், தேசியகீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டுமல்ல. தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களை உள்ளடக்கியது என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

சனாதனம்

சனாதன தர்மம் தான் நம் பாரதத்தை உருவாக்கியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளதை சனாதன தர்மத்தில் கூறப்பட்டிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றி கூறுகிறோம். அதையேதான் சனாதன தர்மமும் சொல்கிறது. ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்த நாடு உருவானது. சனாதன தர்மம் என்பது விரிவானது. அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அனைத்தையும் உள்ளடக்கிய 'தர்மம்' என்று அழைக்கப்படும் பிரபஞ்ச சட்டத்தால் அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதாகும். இது சம்ஸ்கிருதத்தில் மட்டுமல்ல, நமது பண்டைய தமிழ் பாடலான கணியன் பூங்குன்றனாரின் புறநானூறில்கூட `யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரிகளில் காணப்படுகிறது என்று ஆளுநர் தெரிவித்திருந்தார்.

புதிய கல்வி கொள்கை

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது பாரதிதாசனும், பாரதியாரும் கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கம் கொண்ட புரட்சிகர ஆவணம் என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த கருத்து

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையானது நாட்டின் 40 % காப்பர் தேவையைப் பூர்த்தி செய்து வந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு காப்பர் எந்த அளவுக்கு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மக்களை தூண்டிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்துவிட்டனர் என்று ஆளுநர் குற்றம் சாட்டியிருந்தார். அத்தோடு மட்டுமின்றி பேரவை தீர்மானங்களை ஆளுநர் நிலுவையில் வைத்தால் நாகரீகமாக ஒப்புதல் அளிக்கவில்லை என பொருள். வார்த்தை அலங்காரத்துக்காக நிறுத்தி வைப்பு என்கிறோம். நிறுத்தி வைத்தாலே நிராகரிக்கப்பட்டதாகத் தான் அர்த்தம் என்றும் அவர் தெரிவித்தார்.

நீட் தேர்வு விலக்கு விவகாரம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரிய தமிழ்நாடு அரசின் மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வு ரத்து மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சரியான காரணங்களை அரசு தெரிவிக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறியிருந்தார். அதோடு நீட் தேர்வு அவசியம் என சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டதையும் ஆளுநர் சுட்டிக்காட்டி இருந்தார். இதற்குப் பிறகு மீண்டும் அனைத்துக் கட்சிக்கூட்டம் கூடி, தமிழ்நாடு அரசு சார்பாக மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மசோதாக்களை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார். இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர், காலத்தை வீணடிப்பதற்காகவே இவ்வாறான காரியங்களில் ஈடுபடுகிறார் என திமுகவினர் கருத்து தெரிவித்தனர்.

ஆளுநருக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கடந்த நவம்பர் 18ஆம் தேதி சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை, ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் அளிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட வேண்டும் எனவும் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அந்த கூடுதல் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திர சூட் கூறுகையில், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்துப் பேச முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தயார். ஆளுநர் தாமாக முன் வந்து முதல்-அமைச்சரை சந்தித்துப் பேசி இருக்க வேண்டும். முதல்-அமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே சுமூக உறவு இருந்தால்தான் பிரச்னைகளை தீர்க்க முடியும். முட்டுக்கட்டையை தீர்க்க எதையாவது செய்ய முடியுமா எனப் பார்க்கிறோம். குடியரசுத்தலைவருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே இந்த விவகாரத்தை அட்டார்னி ஜெனரல் கவனிக்கும்படி அறிவுறுத்துகிறேன்" என்று அவர் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு ஜனவரி மாதம் 3 ஆம் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே இந்த பிரச்னை தொடர்பாகத் தமிழ்நாடு முதல்-அமைச்சரும் தமிழ்நாடு ஆளுநர் அமர்ந்து பேசலாமே என சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் அறிவுறுத்திய நிலையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகப் பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு தற்பொழுது புயல் நிவாரணப் பணிகள் மற்றும் மத்தியக் குழு ஆய்வு உள்ளிட்ட பணிகள் இருப்பதால் இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு வருவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் தரப்பில் ஆளுநருக்கு பதில் தகவல் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இப்படியான கருத்து மோதல் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு இதுபோன்ற எத்தனையோ உதாரணங்கள் எடுத்து கூறப்பட்டாலும், ஆளுநர் பேசுவதும், தமிழ்நாடு அரசு அதற்கு பதிலடி தருவதும் என தொடர் கதையாகவே மாறியுள்ளது.

முதலமைச்சரும் ஆளுநரும் சந்திப்பு

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.12.2023) சந்தித்துப் பேசினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜ கண்ணப்பன் ஆகியோர் உடன் சென்றனர். 40 நிமிடம் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது பேசிய விவரம் குறித்து அமைச்சர்கள் ரகுபதியும், ராஜ கண்ணப்பனும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அதில், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கவும் , இரண்டு முன்னாள் அமைச்சர்கள் கே.சி வீரமணி மற்றும் விஜயபாஸ்கர் மீது பல மாதங்களாக வழக்குகள் விசாரணையில் உள்ளது அந்தக் கோப்புகளுக்கு உடனடியாக ஆளுநர் அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை ஆளுநரிடம் கோப்புகளாக முதலமைச்சர் கொடுத்துள்ளார் என்று அமைச்சர் ரகுபதி கூறினார். மேலும், சந்திப்பு சுமுகமாக இருந்தது, விடை எப்படி இருக்கும் என்று நீதிமன்றத்தில் தான் கேட்க வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆளுநருக்கு அதிகாரங்கள் உள்ளதால் மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்ப  வேண்டியதில்லை என்பதுதான் எங்களின் வாதம் என தெரிவித்தார்.

இந்நிலையில், முதலமைச்சருடனான சந்திப்பு  குறித்து X தள பக்கத்தில் ஆளுநர் மாளிகை  தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், முதல்வருடனான சந்திப்பு சுமுகமாக இருந்தது. ஆளுநரும், முதலமைச்சரும் மாநிலம் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினர். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தனது முழு அர்ப்பணிப்பையும் வழங்குவேன் என்று மற்றுமொரு முறை ஆளுநர் வெளிப்படுத்தினார். அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவு என ஆளுநர் உறுதியளித்தார். மாநில நலன்கருதி, அவ்வப்போது சந்திப்பதன் அவசியத்தை முதலமைச்சரிடம் ஆளுநர் வலியுறுத்தினார். இவ்வாறு ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவையே, 2023-ல் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழாடு அரசுக்கும் இடையே நடைபெற்ற நிகழ்வுகள் ஆகும்.

Tags :
Advertisement