ஔரங்கசீப் சர்ச்சை - நாக்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!
மகாராஷ்டிராவின் குல்தாபாத்தில் உள்ள முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று கடந்த ஒருவாரமாக இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவையில் சிவசேனா உறுப்பினர் நரேஷ் மாஸ்கே இந்த கோரிக்கையை முன்வைத்ததை தொடர்ந்து இதுதொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
சமீபத்தில் வெளியான நடிகர் விக்கி கௌஷலின் ‘சாவா’ திரைப்படத்தில் மராட்டிய மகாராஜா சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து அம்மாநிலத்திலுள்ள பேரரசர் ஔரங்கசீபின் கல்லறைக் குறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு இரவு 8 மணியளவில் நாக்பூரின் ஹன்சபுரி பகுதியில் அடையாளம் தெரியாத குழு ஒன்று முகத்தை மறைத்துக்கொண்டு வந்து, அங்கு வன்முறையில் ஈடுபட்டுள்ளது. ஹன்சபுரி பகுதியில் இருந்த கடைகள் மீது தாக்குதல் நடத்தி, கற்களை வீசி, அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். இதில் 2 வாகனங்கள் எரிந்து சேதமாகின.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாக்பூர் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் அமைதி காக்குமாறு அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஔவுரங்கசீப் கல்லறையை சுற்றி 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.