கிளாம்பாக்கம் ரயில் நிலையம் - ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டம்!
சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் ரயில் நிலைய பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக ரயில்வே வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, ‘கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையம்’ என்று பெயரிடப்பட்டு திறக்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னையில் இருந்து விரைவு போக்குவரத்து கழகத்தின் விரைவு, சொகுசு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. தற்போது, சென்னையின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் வகையில் கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இந்த பேருந்து நிலையத்துடன் மின்சார ரயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தாம்பரம் – செங்கல்பட்டு வழித் தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ரயில் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு தரப்பிலும் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, =இந்த ரயில்வே பணிகளுக்கு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முதற்கட்டமாக 20 கோடி ரூபாய் வழங்கியது. அதனைத்தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் இப்பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என ரயில்வே வாரியத்திற்கு சிஎம்டிஏ கோரிக்கை விடுத்தது. இப்பணிகளை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து ரயில் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக ரயில்வே வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.