குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் வனவிலங்குகளை #AI தொழில்நுட்பத்துடன் விரட்டும் மலை கிராம மக்கள்!
மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் வனவிலங்குகளை, மலை கிராம மக்கள் ஏஐ தொழில்நுட்பத்துடன் விரட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய வனச்சரகங்கள் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உணவு மற்றும் நீர்நிலைகளை தேடி அலையும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அதனை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய விளை பொருள்களை சேதப்படுத்தி வருகின்றன. ஒரு சில நேரங்களில் வனவிலங்குகளால் மனிதர்கள் உயிரிழக்கும் சூழலும் ஏற்படுகிறது.
இதனை தடுக்க வனத்துறையினர் பல வழிகளை மேற்கொண்டு வந்தாலும் இவ்வாறு வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்கும் நுழைவது தொடர்கதையாகவே உள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கெம்மராம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பமான ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்கும் முயற்சியில் வெற்றியடைந்தனர்.
இந்த சோதனை முயற்சியில், யானைகள் வழக்கமாக ஊருக்குள் நுழையும் இடத்தை கண்டறிந்து அங்கு கண்காணிப்பு கேமராவுடன் ஒலிபெருக்கியும் பொருத்தப்பட்டது. இந்த கேமரா ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோ மானிட்டரில்
இணைக்கப்பட்டு அங்கிருந்து வனத்துறை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்களுக்கு
சிக்னல் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டது.
அதன்படி, கேமரா வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து 400 மீட்டர் தொலைவிற்குள் வனவிலங்குகளின் நடமாட்டம் தென்பட்டால், அவை கேமரா மூலம் கண்டறியப்பட்டு ஏ.ஐ. தொழில்நுட்ப கருவிக்கு சிக்னல் அனுப்புகிறது. இதனையடுத்து, வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் சைரன், பழங்குடி இன மக்கள் எழுப்பும் ஒலியின் சப்தம், ஜே.சி.பி. இயந்திரத்தை இயக்கும்போது ஏற்படும் சப்தம் உள்ளிட்ட பல்வேறு சப்தங்கள் தானாகவே ஒலிக்கிறது.
இந்த ஒலியின் சப்தத்தை கேட்ட வனவிலங்குகள் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பி சென்று விடுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த சோதனை முயற்சியின் பயனாக கடந்த சில மாதங்களில் சில முறை மட்டுமே வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேற முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.