For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

CISF காவலர் கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்த கைத்தடம் என பரவும் படம் போலி! - நியூஸ்செக்கர் கூறுவது என்ன?

03:48 PM Jun 07, 2024 IST | Web Editor
cisf காவலர் கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்த கைத்தடம் என பரவும் படம் போலி    நியூஸ்செக்கர் கூறுவது என்ன
Advertisement

This news fact checked by Newschecker 

Advertisement

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து வரும் ஜூன் 9 ஆம் தேதி மோடி பிரதமராக ஆட்சி அமைக்கவுள்ளார். இதுதொடர்பாக இன்று டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மண்டி தொகுதியின் பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரணாவத் சண்டிகர் விமான நிலையத்துக்கு நேற்று சென்றார். இதனைத் தொடர்ந்து அங்கு வழக்கமான சோதனைக்கு பிறகு கங்கனாவுக்கும், அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் அதிகாரிக்கும் வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அந்த அதிகாரி, கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார்.

டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா ரணாவத் தீவிரவாதிகள் என விமர்சித்ததற்காக இந்த தாக்குதலை அவர் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கங்கனா ரனாவத் விஸ்தாரா விமானம் மூலம் மதியம் 3 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இதுகுறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கங்கனா ரனாவத்தை அறைந்த விவகாரத்தில் பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கங்கனா ரணாவத் கன்னத்தில் பதிந்த தடம் என பரவும் படம் உண்மையா?

மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி அடித்ததன் காரணமாக கங்கனாவின் முகத்தில் அக்காவலரின் கைத்தடம் பதிந்துள்ளதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. மேலும் விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதற்காக கங்கனாவின் முகத்தில் காங்கிரஸின் கைச் சின்னத்தினை வரைந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி என்கிற கேப்சனுடன் பலர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதுக்குறித்த உண்மைத் தன்மையை அறிய நியூஸ் செக்கர் செய்தி நிறுவனம் ஆய்வு செய்தது. அதன் முடிவில்  கங்கனா ரனாவத் இச்சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவை ஆய்வு செய்கையில் கங்கனாவின் கன்னங்களில் எவ்வித தடமும் இடம்பெற்றிருக்கவில்லை.

இதனையடுத்து வைரலாகும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம். அதில் வைரலாகும் படத்தில் இருப்பது கங்கனாவின் கன்னம் அல்ல; விளம்பர நடிகை ஒருவரின் கன்னம் என adsoftheworld.com  இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படத்தின் வாயிலாக அறிய முடிந்தது.

பேகான் கொசுவத்தி மருந்தை விளம்பரப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அப்படத்தில் அப்பெண்ணின் முகத்தை தவிர்த்து, காது மற்றும் கன்னத்தின் பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான பெண்ணின் படத்தையும், வைரலாகும் படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

முடிவு:

CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்ததால் அவரின் கன்னத்தில் CISF காவலரின் கைத்தடம் பதிந்ததாக பரவும் புகைப்படத் தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் படத்திலிருப்பது கங்கனா ரனாவத்தின் கன்னமே அல்ல; விளம்பர நடிகை ஒருவரின் கன்னமாகும்.

கொசுவத்தி மருந்தை விளம்பரப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட படத்தை எடிட் செய்து  இத்தகவல் பரப்பப்படுகின்றது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறது.

Note : This story was originally published by Newschecker and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement