“சினிமா இதயங்களை இணைக்கவும், எல்லைகளை கடந்த ஊடகமாகவும் உள்ளது” - #LaapataaLadies இயக்குநர் கிரண் ராவ்!
சினிமா இதயங்களை இணைக்கவும், எல்லைகளை கடந்த ஒரு ஊடகமாக இருப்பதாகவும், இந்தியாவைப் போலவே உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களிடையே லாபதா லேடீஸ் நல்ல வரவேற்பை பெறும் என நம்புவதாகவும் அப்படத்தின் இயக்குநர் கிரண் ராவ் தெரிவித்துள்ளார்.
திரையுலகினரின் திறமையை பாராட்டும் வகையிலும், அவர்களுக்கு அங்கீகாரம் செலுத்தும் வகையிலும் உலகம் முழுவதும் பல்வேறு சினிமா விருதுகள் வழங்கப்படுகிறது. அவை எல்லாவற்றையும் ஒப்பிடுகையில், திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், இயக்குநர் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டு 97-வது ஆஸ்கர் விழா நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் லபாதா லேடீஸ் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருதுக்கு தமிழ்ப் படங்களான மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, தங்கலான், ஜமா ஆகியவை உட்பட 29 இந்தியத் திரைப்படங்கள், இந்திய திரைப்பட கூட்டமைப்பால் பரிந்துரைக்கப்பட்டன. இதில் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக லாபதா லேடீஸ் தேர்வாகியுள்ளது.
எளிமையான ஒரு கதையின் வழியாக கிராமப்புறங்களில் பெண்கள் ஒடுக்கப்படும் விதம், அவர்களின் உணர்ச்சிகள், முன்னேற்றத்துக்கான வேட்கை, சமத்துவம் மற்றும் காதலை மிக அழகாக இப்படத்தில் பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர் கிரண் ராவ். ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது குறித்து இயக்குநர் கிரண் ராவ் கூறுகையில்,
"நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த ஆண்டு நிறைய நல்லப் படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனது படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டதன் மூலம் அதிகளவிலான பார்வையாளர்களுக்கு காண்பிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் மீது அதிகளவில் நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இந்தப் படத்தில் ஏதாவது ஒன்று இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் படம் பெண்களின் பிரச்னைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் ஆசைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
இது போன்ற ஒரு படம் ஆஸ்கார் விருதுக்கு அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்படும் போது அது மிகவும் ஊக்கமளிக்கிறது. பெண்கள் எதிர்கொள்ளும் பல பிரச்னைகள் மற்றும் இந்தப் படத்தில் நடித்துள்ள புதிய நடிகர்கள் மற்றும் அவர்களின் திறமைகளை மக்கள் பாராட்டியுள்ளனர். ஆஸ்கார் விருதுக்கான பயணம் எளிதானது அல்ல. ஆஸ்கர் விருதுகளுக்கான லாபதா லேடீஸ் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.
எனது படக்குழுவின் அயராத உழைப்புக்கு இந்த அங்கீகாரம் ஒரு சான்றாகும். இந்தப் படத்தைத் தயாரிக்க 4 முதல் 5 ஆண்டுகளானது. படக்குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வமே இந்தக் கதைக்கு உயிர் கொடுத்தது. சினிமா எப்போதுமே இதயங்களை இணைக்கவும், எல்லைகளை கடந்த ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக இருந்து வருகிறது. இந்தியாவைப் போலவே இந்தப் படம் உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் என நம்புகிறேன்” இவ்வாறு தெரிவித்தார்.