தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜாவின் மனுவுக்கு பதிலளிக்க சினிமா பைனான்சியருக்கு உத்தரவு!
மறைந்த சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரிராஜா கடந்த 2012ஆம் ஆண்டு 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்தக் கடனை திருப்பி செலுத்தும் வகையில் அளித்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததாக கூறி, இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கு எதிராக முகுந்த் சந்த் போத்ரா காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் 2015ஆம் ஆண்டு வழக்கிலிருந்து கஸ்தூரிராஜாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து முகுந்த் சந்த் போத்ரா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கும் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து கடன் பெறும்போது அளித்த வெற்று காசோலையை தவறாக பயன்படுத்தியதாக முகுந்த் சந்த் போத்ராவுக்கு எதிராக இயக்குனர் கஸ்தூரிராஜா ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முகுந்த் சந்த் போத்ராவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக தங்களுக்கு எதிராக பொய் வழக்கு தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கு எதிராக முகுந்த் சந்த் போத்ராவின் மகன் ககன் போத்ரா ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இயக்குனர் கஸ்தூரிராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி வேல்முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இயக்குனர் கஸ்தூரிராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காஜா மொய்தீன் கிஸ்தி, பொய் வழக்கு தாக்கல் செய்ததாக கூறி தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், நீதிமன்ற நடவடிக்கையை தவறாக பயன்படுத்தும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மனுவுக்கு பதில் அளிக்கும்படி சினிமா பைனான்சியர் ககன் போத்ராவுக்கு உத்தரவிட்ட நீதிபதி மனு மீதான விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.