வேளாங்கண்ணியில் களைக்கட்டிய கிறிஸ்துமஸ் விழா - கோலாகலமாக கொண்டாடும் மக்கள்!
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அந்த வகையில், இயேசு பிறந்த தினமான டிச. 25 உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பே, கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் நட்சத்திர விளக்குகளையும், இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததை குறிக்கும் வகையில் குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்து அதில் வண்ண விளக்குகளையும் ஒளிர வைத்து, பண்டிகைக்கு தயாராகி வந்தனர். மேலும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து குழந்தைகளுக்கு பரிசுகளையும், இனிப்புகளையும் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
அந்த வகையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வெகு விமரிசையாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் உள்ள சேவியர் திடலில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர் குழந்தை ஏசு பிறப்பின்போது ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
பின்னர் விவிலியத்தில் இருந்து திருவாசகங்கள் வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கொண்டாடப்படுகிறது. மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பு, தங்கும் வசதி போன்றவை பேராலய நிர்வாகம் மாவட்ட நிர்வாகமும் இணைந்து செய்துள்ளது.