China Open Finals : இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் சின்னரை எதிர்கொள்கிறார் ஸ்பெயின் வீரர் அல்காரஸ்!
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் ரஷ்ய வீரர் மெத்வதேவ்வை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று இறுதிப்போட்டியில் அல்காரஸ் - சின்னர் உடன் மோதுகிறார்.
சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அந்நாட்டின் பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று (அக். 1) நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் 2 வீரரான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், நம்பர் 3 வீரரான ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் அல்காரஸ் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடி வந்தார். முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றிய அல்காரஸ், இரண்டாவது செட்டை 6-3 என வென்றார். முடிவில் அல்காரஸ் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவை வென்று பைனலுக்குள் நுழைந்தார். இதனால் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
அதேபோல், மற்றொரு அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், சீனாவின் யுன்சாவோகேடே மோதினர். இதில் சின்னர் 6-3, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பைனலில் அல்காரஸ், சின்னர் மோதுகின்றனர். சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிசுற்று இன்று (அக்.2) நடைபெற உள்ளது.
மேலும், பெண்கள் ஒற்றையர் 4வது சுற்றுப் போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஸ்பெயினின் படோசா மோதினர். இதில் ஏமாற்றிய பெகுலா 4-6, 0-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். மற்ற 4வது சுற்றுப் போட்டிகளில் சீனாவின் ஜாங் ஷுவாய், உக்ரைனின் யூலியா ஸ்டாரோடப்ட்சேவா வெற்றி பெற்றனர்.