For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"வினாத்தாள் கசிவுகளால் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது" - ராகுல் காந்தி கண்டனம் !

வினாத்தாள் கசிவுகளால் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
01:26 PM Mar 13, 2025 IST | Web Editor
 வினாத்தாள் கசிவுகளால் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது    ராகுல் காந்தி கண்டனம்
Advertisement

இளநிலை நீட் நுழைவுத் தேர்வு, யுஜிசி நெட் தேர்வு என வரிசையாக மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகளின் வினாத்தாள் கசிந்து வருவதை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

Advertisement

"6 மாநிலங்களில் உள்ள 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு என்பது இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான சக்கரவியூகம் ஆகும். வினாத்தாள் கசிவால் நேர்மையாக படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டு, மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் கடின உழைப்பின் பலனையும் பறிக்கின்றது.

கடின உழைப்பைவிட நேர்மையின்மை சிறந்தது என்ற தவறான செய்தியையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நீட் வினாத்தாள் கசிவு நாட்டையே உலுக்கி ஓராண்டு கூட ஆகவில்லை. எங்களின் போராட்டத்துக்கு பிறகு புதிய சட்டத்தை கொண்டு வந்து, அதுதான் தீர்வு என்று பின்புறம் ஒளிந்துகொண்டது. ஆனால், அடுத்தடுத்த வினாத்தாள் கசிவுகள் அரசின் தோல்வியை நிரூபித்துள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் மாநில அரசாங்கங்களும் வேறுபாட்டை மறந்து ஒன்றாக இணைந்து வலுவான முன்னெடுப்பை எடுத்தால் மட்டுமே இதனை ஒழிக்க முடியும். இந்தத் தேர்வுகளின் கண்ணியத்தைப் பராமரிப்பது நமது குழந்தைகளின் உரிமை. எந்த விலை கொடுத்தேனும் அதனை பாதுகாக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement