For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம் | பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!

பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
05:53 PM May 14, 2025 IST | Web Editor
பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம்   பேருந்தின் ஓட்டுநர்  நடத்துநர் பணியிடை நீக்கம்
Advertisement

தர்மபுரி மாவட்டம் முத்தம்பள்ளி கரங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 9 மாத நவனீஸ் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். கட்டிட வேலை செய்து வருவதால், ராஜதுரை கோவையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவர்கள் தங்கம் சொந்த ஊருக்கு சென்றனர்.

Advertisement

பின்னர் நேற்று முன் தினம் இரவு அவர்கள் கோவைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். சேலம் வந்த அவர்கள் அங்கிருந்து கோவை செல்லும் பேருந்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது ராஜதுரை ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறம் உள்ள இருக்கையில் மனைவி மகளுடன் அமர்ந்திருந்தார். அவர் தனது 9 மாத குழந்தையை தோளில் வைத்தப்படி வந்துகொண்டிருந்தார்.

பேருந்து சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள கத்தேரி வளையக்காரனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது, ராஜதுரையின் தோளில் இருந்த அவரது மகன் நழுவி படிக்கட்டு வழியாக பேருந்தில் இருந்து கீழே விழுந்தார். பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினர். கீழே இறங்கி வந்து பார்த்தபோது, நவனீஸ் ரத்த காயங்களுடன் சாலையில் கிடந்தார்.

பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். பேருந்தின் முன்பக்க கதவு திறந்து இருந்த சூழலில் அதனை மூடும்படி கூறியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அலட்சியமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என குழந்தையின் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த தேவூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், பேருந்தின் ஓட்டுநர் சிவன்மணி மற்றும் நடத்துனர் பழனிச்சாமி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கோவை மண்டல போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"உப்பிலிபாளையம் கிளையைச் சார்ந்த TN38N3278 என்ற பேருந்து 12.05.2025 அன்று இரவு சேலத்தில் 9.15 மணி அளவில் புறப்பட்டு குமாரபாளையம் அருகில் வரும் பொழுது முன்படிக்கட்டிற்கு நேராக உள்ள 3 நபர்கள் அமரும் இருக்கையில் பயணம் செய்த ஆண் பயணி நல்ல தூக்கத்தில் இருந்த நிலையில் அவரது கையிலிருந்த 9 மாத ஆண் குழந்தை அவரது கையிலிருந்து நழுவி கீழே விழுந்துள்ளது. இது அவருக்கு தெரியவில்லை.

அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு பயணி முன்படிக்கட்டு வழியாக ஏதோ விழுந்ததாக தெரிவித்ததை அடுத்து பேருந்தினை நிறுத்தி பார்த்த போது குழந்தை விழுந்தது தெரியவந்து மீட்டு ஒரு காரில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குழந்தை இறந்து விட்டது எனவும் தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக தேவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தூக்கத்தில் இருந்த தந்தையின் கவனக்குறைவாலும், பேருந்துவின் முன்பக்க கதவை மூடாத நிலையில் பேருந்தை இயக்கியதாலும் ஏற்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக பேருந்தில் பணியில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரையும் தற்காலிக வேலை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement