தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவையில் விண்வெளி வீரர்களுக்கு முதலமைச்சர்கள் வாழ்த்து!
விண்வெளியில் ஆராய்ச்சி பணி மேற்கொள்வதற்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
விண்வெளி நிலையத்தில் இருந்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப வேண்டியவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டிய சூழல் உருவானது. இந்த நிலையில் விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு டிராகன் விண்கலம் இன்று அதிகாலை பூமிக்கு திரும்பியது. இதையடுத்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு உலகம் முழுவதும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு சட்டசபை மற்றும் புதுச்சேரி சட்டசபையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
"விண்வெளிக்குச் சென்று அங்கு 9 மாதங்களாக இருந்து பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோருக்கு பாராட்டுகள். அவர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்த விண்வெளி வீரர்கள் குழுவுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இதே போல் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "விண்வெளி சாகச பயணத்தை வெற்றிகரமாக முடித்து, 9 மாதங்களுக்கு பிறகு பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவிற்கு வாழ்த்து" தெரிவிக்கப்பட்டது.