“பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்” - #DyCM உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்பது குறித்து இன்று மாலைக்குள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் எனவும், தொடர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (அக். 17) வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (அக். 14) நள்ளிரவு கனமழை பெய்தது.
இந்நிலையில், மழை தொடர்பாக முன்னேற்பாடுகளை கண்காணிப்பதற்காக பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், ராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை, ஜி.பி.சாலை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, இன்று (அக். 15) காலை சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் எங்கெங்கு எவ்வளவு மழை பெய்தது? பாதிப்புகளை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆய்வு செய்தார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
''சென்னையில் 89 படகுகள், பிற மாவட்டங்களில் 130 படகுகள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 300 நிவாரண மையங்கள் தயாராக இருக்கிறது. சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் 631 மையங்கள் தயாராக உள்ளது. மொத்தம் 931 மையங்கள் தற்பொழுது தயார் நிலையில் உள்ளது. சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மழை வெள்ளத்தை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவத்துறையும், மாநகராட்சியும் இணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க ஆயிரம் சிறப்பு முகாம்கள் தொடங்கி வைத்திருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 100 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 13,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னையில் மொத்தம் 8 இடங்களில் மரம் முறிந்து விழுந்துள்ளது. அவற்றை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். தேவைப்பட்டால் சென்னைக்கும் அவர்கள் அழைத்துவரப்பட்டு வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தபடுவார்கள். நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்பது குறித்து இன்று மாலைக்குள் தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார்''
இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.