Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாடு மீனவர் உயிரிழப்பு | உடலை உடனடியாக தாயகம் கொண்டுவர வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

09:45 PM Aug 01, 2024 IST | Web Editor
Advertisement

இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த மீனவரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வர மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (ஜூலை - 31) 397 விசைப் படகுகள் மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் இந்திய கடல் எல்லை பகுதியில் வங்கக்கடலில் நெடுந்தீவு அருகில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று அங்கு இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தது.

இதையடுத்து, கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பலைக் கொண்டு வேகமாக மோதினர். இதில் நிலைகுலைந்த மீனவர்களின் விசைப்படகு மூழ்கியது. உடனடியாக வேறு வழியின்றி படகில் இருந்த மீனவர்கள் மூக்கையா, மலைச்சாமி, ராமச்சந்திரன், முத்து முனியாண்டி ஆகிய நான்கு பேரும் உயிர் பிழைப்பதற்காக கடலில் குதித்தனர். பின்னர் இலங்கை கடற்படை கப்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.

இதையும் படியுங்கள் : வேட்டையன் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகை துஷாரா!.

இதில் படுகாயமடைந்த 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகத் தகவல் வெளியாகியது. கடலில் மூழ்கிய மீனவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி (வயது 59) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அத்துடன் உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடலை உடனடியாக தாயகம் கொண்டுவரவும், காயமடைந்த மீனவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி, தமிழ்நாட்டிற்கு அழைத்துவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (1-8-2024) கடிதம் எழுதியுள்ளார்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
CHIEF MINISTERFishermaninjuredJaishankarSri Lankan Navytamil naduUnion External Affairs Minister
Advertisement
Next Article