மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை..
மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களிடம் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் இன்று புயல் உருவாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் நாளை (டிச. 4) மற்றும் நாளை மறுநாள்(டிச. 5) மிக கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வரும் 5-ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புயல் எச்சரிக்கை எதிரொலியாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், 12 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார்.
இதனைத்தொடர்ந்து நேற்று அமைச்சர்கள், திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகள் தத்தமது பகுதிகளில் இருந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை செய்யுமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று முதல் வட தமிழ்நாட்டில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களிடம் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் அப்போது அவர் கேட்டறிந்தார்.