மாஞ்சோலை மக்களை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?
தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வின்போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அந்த வகையில் கடந்தாண்டு இறுதியில் ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டார்.
தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள இருந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றும், இன்றும் விழுப்புரத்தில் கள ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மறைந்த ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கத்தையும், இட ஒதுக்கீடு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த 21 சமூக போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தையும் திறந்து வைத்து இன்று(ஜன.28) சென்னை திரும்பினார்.
விழுப்புரத்தைத் தொடர்ந்து அடுத்த மாதம் நெல்லை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். அந்த கள ஆய்வின்போது மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களையும் முதலமைச்சர் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை நீர்வளத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.