சுற்றுலாப் பயணிகளை காப்பாற்ற போராடி கொல்லப்பட்ட உள்ளூர் இளைஞர் ஆதில்ஷா - முதலமைச்சர் உமர் அப்துல்லா நேரில் அஞ்சலி!
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். தாக்குதலில் உயிரிழந்தவகளுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
தாக்குதல் சம்பவம் அறிந்த பிரதமர் மோடி சவுதி அரேபியாவிற்கு விமேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் இருந்து அவசரமாக நாடு திரும்பினார். இதனிடையே அம்மாநிலத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. மேலும் ஹெலிகாப்டர் உதவியுடன் பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களை ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர். தொடர்ந்து அமித் ஷா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களின் மாதிரி வரைபடங்கள் வெளியானது.
பிரதமர் மோடியைத் தொடர்ந்து மத்திய கேபினட் அமைச்சர்கள் சுற்றுப்பயணம் ரத்து செய்தனர். அதன்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் தங்களது சுற்றுப் பயணங்கள் மற்றும் பிற அரசு அலுவல் தொடர்பான நிகழ்வுகளை ரத்து செய்தனர். இதனிடையே ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டதிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இந்த அவசர ஆலோசனையில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பின் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “SVES விசாக்களின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர அனுமதி இல்லை. கடந்த காலங்களில் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட SVES விசாக்கள் ரத்து செய்யப்படுகின்றன. SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
அட்டாரி – வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது. பாகிஸ்தான் உடனான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும்” என்று கூறினார்.
இந்த நிலையில் தீவிரவாத தாக்குதலின்போது தீவிரவாதியின் கையில் இருந்த துப்பாக்கியை பறித்து சுற்றுலா பயணிகளை காப்பாற்ற முயன்ற உள்ளூர் இளைஞரான ஆதில் ஹுசைன் ஷா தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினரை பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நன்றியோடு நினைவுகூறுகின்றனர்.
இந்த நிலையில் வீரமரணம் அடைந்த ஆதில் ஹுசைன் ஷாவின் குடும்பத்தினரை ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த ஆதில் ஹுசைன் ஷாவிற்கு தாய் , தந்தை மற்றும் மனைவி குழந்தைகள் உள்ளனர். தாய் மற்றும் தந்தை முதுமையை அடைந்துவிட்டதால் அவர்கள் வீட்டில் பொருளீட்டக்கூடிய ஒருயொரு நபர் ஆதில் ஹுசைன் ஷா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது