For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிகாகோ செல்கிறார் முதலமைச்சர் #MKStalin - முன்னணி தொழிலதிபர்களை சந்திக்க திட்டம்!

10:10 AM Sep 02, 2024 IST | Web Editor
சிகாகோ செல்கிறார் முதலமைச்சர்  mkstalin   முன்னணி தொழிலதிபர்களை சந்திக்க திட்டம்
Advertisement

அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சான்பிரான்சிஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சிகாகோ செல்கிறார்.

Advertisement

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து முதல் நாளில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதன் பின்னர் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிய அவர்..

“சான் பிரான்சிஸ்கோ என்ற ஊரில் இருக்கிறேனா, சென்னையில் இருக்கிறேனா என்று சந்தேகப்படுகிற அளவிற்கு, தமிழ்நாட்டில் இருக்கிற உணர்வையே எனக்கு நீங்கள் இப்போது ஏற்படுத்திவிட்டீர்கள். இப்படிப்பட்ட அன்பான வரவேற்பு - சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிற இந்தியத் துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்

உலகின் மூன்றாவது பெரிய நாட்டிற்கு நான் வந்திருக்கிறேன். 1971-ம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி வருகை தந்தார். அவரது மகனான நானும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற தகுதியோடு இப்போது வந்திருக்கிறேன். அமெரிக்கா என்பது இந்தியர்களை ஈர்க்கிற நாடாக எப்போதுமே இருந்திருக்கிறது.

நியூயார்க், நியூஜெர்சி, வாசிங்டன், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பால்ட்டிமோர், பாஸ்டன், டாலஸ், ஹியூஸ்டன், பிலடெல்ஃபியா, அட்லாண்டா இப்படி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீங்கள் வசித்து வருகிறீர்கள். சில பேரை நான் குறிப்பிட மறந்திருக்கலாம். இப்படி பரந்து விரிந்த அமெரிக்கா முழுமைக்கும் தமிழர்கள் பரந்து இருக்கிறார்கள். தொழில் முதலீடுகளை ஈர்க்க நான் வந்திருந்தாலும், என் இனிய இந்திய சொந்தங்களின் முகங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்கு தான் நான் இப்போது இங்கு வந்திருக்கிறேன்.

அமெரிக்க நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் இடம் பிடித்திருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்குப் பிறகு இருதரப்பு வர்த்தகமும் மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது. இவையெல்லாம் இரண்டு நாடுகளுக்குமான நட்பின் அடையாளங்கள். தமிழ்நாடு என்பது அமெரிக்காவின் ஈர்ப்புக்குரியதாக இருக்கிறது. புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருப்பது தான் இதற்கு காரணம்.

300-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களுடைய திட்டங்களை நிறுவியிருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக அதிகமாக அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நேரில் அழைக்கத் தான் நான் வந்திருக்கிறேன். இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி மக்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களை தூண்ட வேண்டும் என்று உங்களை உரிமையோடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

மிகச் சிறந்த கல்வி, அந்த கல்வியில் அறிவுக் கூர்மை, தனித் திறமைகள், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை, குறிப்பிட்ட இலக்கை அடைய தளராத முயற்சிகள், இவை தான் உங்களை இந்த இடத்தில் கொண்டு வந்து உயர்த்தியிருக்கிறது. பணம், புகழ், அதிகாரம், வசதி வாய்ப்புகளை விட இந்த ஐந்தும் தான் உங்களை வளர்த்து இருக்கிறது. இந்த உயர்ந்த குணங்களை மற்றவர்களுக்கும் உணர்த்தி அனைவரின் வளர்ச்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

இந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோவில் தனது பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிகாகோ புறப்படுகிறார். அங்கே பல நிறுவனங்களைச் சார்ந்தவர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement