தேவர் குருபூஜையில் பங்கேற்கிறார் முதலமைச்சர் #MKStalin… மதுரையில் டிரோன்கள் பறக்க தடை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் மதுரையில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117வது குருபூஜை விழா நாளை மறுநாள் (அக்.30) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அந்நாளில் முதலமைச்சர் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். இதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (அக்.29) இரவு 7மணியளவில் விமானம் மூலம் மதுரை செல்கிறார். தொடர்ந்து நாளை இரவு மதுரையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஒய்வெடுத்துவிட்டு பின்னர் அங்கிருந்து பசும்பொன் செல்கிறார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம், அதனை சுற்றியுள்ள பகுதிகள், பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாநகர, மாவட்ட எல்லைக்குள் நாளை மற்றும் நாளை மறுநாள் (அக்.29 மற்றும் 30) டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா விமானங்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.