அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் #MKStalin இன்று கள ஆய்வு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கள ஆய்வு மேற்கொள்கிறார்.
அரியலூர் மாவட்டத்தில் இன்று (நவ.15) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (நவ.14) இரவு ஜெயங்கொண்டத்திற்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்குள்ள பயணிகள் விடுதியில் தங்கினார். தொடர்ந்து இன்று (நவ.15) காலை 9.30 மணியளவில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் உள்ள புதிய சிப்காட் தொழிற்பேட்டையில் சுமார் 130 ஏக்கரில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் காலை 10.30 மணியளவில் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் 'ஊட்டச்சத்தை உறுதி செய்' என்ற திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார் . காலை 11.15 மணியளவில் அரியலூர்-செந்துறை சாலையில் உள்ள கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் அரியலூர் மாவட்டத்திற்கான 26 புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டி, 51 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 10,141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் 27 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 456 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, 11,721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார் . மாலை 4.30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே அரியலூர் சாலையில் உள்ள பூமணம் திருமண மண்டபத்தில் நடைபெறும் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அதில், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டர்லின்ஆலோசனை வழங்குவதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மாலை 6 மணியளவில் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து இரவு 7.55 மணியளவில் விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.