“போராட்டத்தை நிறுத்தவே முதலமைச்சர் மம்தா நினைக்கிறார்” - கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் மருத்துவரின் தாய்!
கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர், ‘முதலில் தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவ நிர்வாகம் கூறியது’ என அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைக்கண்டித்து கொல்கத்தாவில் போராட்டமும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தனக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின்படி என்ன நடந்தது என அப்பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.
அவரது தாய் கூறுகையில், “முதலில், எங்களுக்கு மருத்துவமனையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், உங்கள் மகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.
உடனடியாக அழைப்பு வந்த எண்ணுக்கு நாங்கள் தொடர்பு கொண்டு என்ன ஆனது என்று கேட்டோம். அதற்கு ‘மருத்துவமனைக்கு வாருங்கள்’ என்று கூறி மீண்டும் அழைப்பை துண்டித்துவிட்டனர். பிறகு மீண்டும் நாங்கள் அழைத்தபோது பேசியவர் உதவி கண்காணிப்பாளர் என்று தெரியவந்தது. அவர் உங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டார் எனவும் கூறினார்.
எங்கள் மகள் வியாழக்கிழமை இரவு பணிக்குச் சென்றார். வெள்ளிக்கிழமை இரவு 10.53 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தோம். ஆனால், எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. மகளைப் பார்க்கவும் அனுமதிக்கவில்லை. நள்ளிரவு 3 மணிக்குத்தான் உள்ளே அனுமதித்தார்கள். அப்போது அவரது உடலில் ஒரே ஒரு துணி மட்டுமே இருந்தது. கை உடைக்கப்பட்டிருந்தது. கண் மற்றும் வாயிலிருந்து ரத்தம் வந்திருந்தது.
மகளைப் பார்த்ததுமே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். அங்கிருந்தவர்களிடமும், அவர் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறினோம். எங்கள் மகளை டாக்டராக்க நாங்கள் எவ்வளவோ பாடுபட்டோம். ஆனால் இப்போது அவளை கொலை செய்துவிட்டார்கள்.
இந்த வழக்கு விசாரணையின் தொடக்கத்திலிருந்தே எங்களுக்கு அதிருப்திதான். இதில் ஒருவர் அல்ல ஒன்றுக்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று சந்தேகிக்கிறோம். முதலமைச்சர் மம்தா தொலைபேசி மூலம் பேசினார். உண்மையான குற்றவாளி உடனடியாகக் கைது செய்யப்படுவார் என்று கூறியிருந்தார். ஆனால், அவர் சொன்னதுபோல ஒன்றும் நடக்கவில்லை. ஒருவர் மட்டுமே கைதாகியிருக்கிறார். நாங்கள் நிச்சயமாக சொல்கிறோம், இதில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பிருக்கிறது. ஒட்டுமொத்த துறையுமே இதற்குப் பொறுப்பு. இதில் காவல்துறை சிறப்பாக செயல்படவில்லை.
போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்றுதான் முதலமைச்சர் நினைக்கிறார். எனது மகளின் உடல் கூறாய்வை முடித்து எவ்வளவு விரைவாக அவரது உடலை நல்லடக்கம் செய்ய முடியுமோ அதில்தான் பல அதிகாரிகளும் குறியாக இருந்தார்கள்” என தெரிவித்துள்ளார். இதுப்பற்றி பேசிய அப்பெண்ணின் தந்தை, ஒரு மகளை இழந்துவிட்டேன். லட்சக்கணக்கான பிள்ளைகள் கிடைத்திருக்கிறார்கள். ஆனால் அதே வேளையில், எனது மகளின் மோசமான புகைப்படங்களைப் பகிர்ந்து தவறான தகவல்களையும் சிலர் பரப்புகிறார்கள். அது வேதனையை அளிக்கிறது” என்றார்.