மதுரையில் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழாயொட்டி, கோரிப்பாளையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா, அக்.28-ல் தேவர் நினைவாலய நிர்வாகத்தின் சார்பில் ஆன்மிக விழா யாகசாலை, லட்சார்ச்சனை பெருவிழாவுடன் தொடங்கியது.
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இன்று (அக்.30) காலை 9 மணிக்கு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், மு.பெ.சுவாமிநாதன், பி.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ், டி.ஆர்.பி.ராஜா மற்றும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.
மேலும் முன்னாள் முதலமைச்சர்கள் பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், சசிகலா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்த உள்ளனர்.
இதனிடையே மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ், கீதா ஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில், ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ்குமார், மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பத்தாயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.