ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநரை சந்தித்துப் பேசினார். இருவரும் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு மேலான ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருந்தார். இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கோரி ஆளுநரை அமைச்சர்கள் பலமுறை சந்தித்து வலியுறுத்தினர். ஆனாலும் அவர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் ரவி தாமதப்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பியது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக வந்த மசோதாக்களை திருப்பி அனுப்பிவிட்டு, மீண்டும் பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய மசோதாக்களை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது என அரசியலமைப்பின் 200-வது பிரிவை சுட்டிக்காட்டினர். மேலும், ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் அழைத்து சுமுகமாக பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருமகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜ கண்ணப்பன் ஆகியோர் உடன் சென்றனர். இந்த சந்திப்பின்போது நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநரிடம் வலியுறுத்தப்படுகிறது. அதேநேரத்தில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி மாதம் கூடவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரையும் இடம்பெறவிருக்கிறது. இந்த சந்திப்பின்போது ஆளுநருக்கு முதல்வர் அழைப்பு விடுப்பார் என்றும் கூறப்படுகிறது.