இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரான ‘தமிழ்மகள்’ உமா குமரன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரான வெற்றிவாகை சூடியுள்ள முதல் தமிழ்ப் பெண் உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில், லண்டன் ஸ்டராட்போர்டு தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் 19,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட, தமிழ் வம்சாவளியை சேர்ந்த முதல் எம்.பி., என்ற பெருமையை உமா குமரன் பெற்றுள்ளார். இவரது பெற்றோர் இலங்கையின் ஆயுதப் போரில் இருந்து தப்பி இங்கிலாந்தின் கிழக்கு லண்டனில் தஞ்சமடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரான முதல் தமிழ்ப் பெண் உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பிரிட்டனின் ‘ஸ்ட்ராட்ஃபோர்ட் அண் போ’ நாடாளுமன்றத் தொகுதியின் முதல் உறுப்பினரும், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள முதல் தமிழ்ப் பெண்மணியுமாகிய உமா குமரனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தமிழர்களுக்குத் தாங்கள் மிகப்பெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளீர்கள்!” என பதிவிட்டுள்ளார்.