ஊரகப் பகுதியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் - தருமபுரியில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டத்தை ஊரகப் பகுதியில் செயல்படுத்தும் விதமாக தருமபுரியில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு அரசின் 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டம் நகர்ப் புறங்களில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் தற்போது ஊரகப் பகுதியில் உள்ள மக்களுக்காக விரிவுபடுத்தப்பட்டு தொடங்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது.
மக்களுடன் முதல்வர் திட்டம் ஏற்கெனவே நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, ஊரகப் பகுதிகளிலுள்ள உள்ளாட்சிகளிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்கத்தை தருமபுரியில் இன்று அவர் தொடங்கி வைக்கிறார்.