புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் - வைக்கத்தில் இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று றந்து வைக்கிறார்.
கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கோயில் நுழைவுப் போராட்டம் நினைவாக,1994-ல் தந்தை பெரியாருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. அந்த நினைவிடத்தை புனரமைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவகத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். இதில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர்களுக்கான மாடம், சிறுவர் பூங்கா போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
1994-ல் திறக்கப்பட்ட இந்த நினைவகம், தற்போது ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியைத் துவங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கேரளா சென்றார். இன்று காலை 10 மணி அளவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற உள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து வைக்கிறார்.