சிவகங்கையில் 2வது நாளாக கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா? என்பதை அறிவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது சிவகங்கையில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று சிவகங்கை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சாலையில் நடந்து சென்ற முதலமைச்சரிடம் பொதுமக்கள் பேசி மகிழ்ந்தனர். தொடர்ந்து களப்பணியை தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், காரைக்குடி முடியரசன் சாலையில் உள்ள அரசு விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அம்மாணவிகளிடம் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும், அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தனது கள ஆய்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து மருது சகோதரர்கள் சிலைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும் பல நலத்திட்ட உதவிகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.