கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரணம்: 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூ.5கோடி நிவாரணம் மற்றும் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவை அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
நேற்று காலை முதலே கனமழை பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், முண்டகையில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலையில் பெரிய அளவிலான 2வது நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 67-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிலச்சரிவில் 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
2 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபடுகின்றனர். முண்டகை மற்றும் அட்டமலை செல்ல வடம் பயன்படுத்தி தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, பெங்களூர் உட்பட பிற பகுதிகளில் இருந்து நான்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வயநாடு விரைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
வயநாடு நிலச்சரிவு விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவையில் கேரள எம்பிக்கள் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதே போல மக்களவையிலும் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் நிலச்சரிவால் பாதிப்புக்குள்ளான கேரளாவிற்கு ரூ.5 கோடி நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க்.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் இரு குழுக்களை கேரளாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்.