ஐரோப்பிய பயணம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்!
தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இப்பயணம் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஐரோப்பிய பயணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,
”தமிழ்நாட்டில் உள்ள கட்டமைப்புகள், படித்த இளைஞர்கள் மற்றும் அவர்களின் திறமை என்ன என்பதை ஜெர்மனியில் முதலீட்டாளர்களிடம் விவரித்தோம். அதை கேட்ட அவர்கள், தமிழ்நாட்டை பற்றி வியந்து பேசினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த மாற்றம், வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்வதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பெரியார் சிலையை திறந்துவைத்து, அவர்கள் முன் பெரியார் பற்றி பேசுகையில் மெய்சிலிர்த்தது.
ஜெர்மனியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைச் சந்தித்தபோது, இடஒதுக்கீட்டில் படித்து, முன்னேறிதான் வெளிநாடு வந்தததாகக் கூறினர். என் குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி ரத்து செய்ததுதான், இந்தளவுக்கு முன்னேறியதற்குக் காரணம். அரசுப் பள்ளியில் படித்து, தற்போது லண்டனில் உயர்கல்வியில் படிப்பவர்கள், திமுக அரசின் ஸ்காலர்ஷிப்பால்தான் இங்கு வந்ததாகவும் கூறினர். இந்த மாதிரியான பல மறக்க முடியாத அனுபவங்கள் கொண்டதாகத்தான் ஐரோப்பிய பயணம் அமைந்தது. அங்குள்ள மக்கள், பொது இடங்களில் எந்தளவுக்கு தன்னொழுக்கத்துடன் இருக்கிறார்கள் என்பதைக் கண்டேன். அதே பொறுப்புணர்ச்சி இங்கும் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.