முதல்வர் மு.க.ஸ்டாலின்- ஓபிஎஸ் சந்திப்பு : பாஜக உடனான கூட்டணி முறிவை அடுத்து இன்று இரண்டாவது முறையாக சந்திப்பு!
அண்மையில் பிரதமர் மோடி தமிழகத்தில் 2 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். தூத்துக்குடி வந்த பிரதமர் மோடியை சந்திக்க முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கடிதம் எழுதினார். ஆனால் அவருக்கு நேரம் வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கல்வி உதவித் தொகை தொடர்பாக மத்திய அரசை அவா் விமர்சித்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று, சென்னையில் தனது ஆலோசகா் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் அதிமுக உரிமை மீட்பு குழு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டார். 3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனையின் முடிவில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக உரிமை மீட்புக்குழு விலகுவதாக அறிவித்தார். மேலும் ஓபிஎஸ் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களையும், தொண்டர்களையும் சந்திப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளர். பாஜக உடனான கூட்டணி முறிவை அறிவித்துள்ள நிலையில் முதல்வருடனான ஒ.பன்னீர் செல்வத்தின் சந்திப்பு அரசியலில் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஏற்கனவே காலை நடைப்பயிற்சியின் போது முதலமைச்சர் ஸ்டாலினை ஒ.பன்னீர் செல்வம் சந்தித்த நிலையில் இன்று ஓரே நாளில் இரண்டாவது முறையாக முதல்வரை சந்தித்துள்ளார். மதியம் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடைப்பயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது தற்செயலானது என ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.