2,642 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) சார்பில் கடந்த ஜனவரி 5-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இதில், எம்பிபிஎஸ் முடித்த 24 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் 14,855 பேர் தேர்ச்சி பெற்றனர். இதற்கிடையே, கூடுதலாக 89 காலி இடங்கள் கண்டறியப்பட்டதால், மொத்த காலி இடங்கள் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரிக்கப்பட்டது.‘
இதையும் படியுங்கள் : தவெக-வின் கையெழுத்து இயக்கம் – முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார் விஜய்!
இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 12-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 4,585 பேர் பங்கேற்றனர். அவர்களது பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, சென்னை எழும்பூரில் உள்ள நலவாழ்வு, குடும்பநல பயிற்சி நிலையத்தில் கடந்த 22ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது.
இந்த நிலையில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு 2,642 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், இவ்விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.