ஆக.22ல் அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தொழில் முதலீடுகளை ஈர்க்க ஆகஸ்ட் 22ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்களை சந்திக்க விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எப்போது செல்வார் என்கிற தேதிகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகமல் இருந்தது. இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் முதலமைச்சர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் மூலம் ரூ.10,882 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம் 18,500க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் நடந்த உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளில், 60% முதலீடுகள் பணிகளாக மாறியுள்ளதாகவும் அவற்றின் மூலம் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், 379 ஒப்பந்தங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன அமைச்சர் டி.ஆர்.ராஜா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் அமெரிக்கா சென்று பெரிய தொழில் நிறுவனங்களை சந்தித்து தொழில் முதலீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈர்க்க உள்ளார். ஜனவரி மாதம் ஸ்பெயின் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12நாட்கள் பயணம் மேற்கொண்ட நிலையில் தமிழகத்துக்கு ரூ.3440 கோடிக்கு தொழில் முதலீட்டுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு வந்தார்.
இதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க ஆகஸ்ட் 22ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.