மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 3) மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்செந்தூர் விரைவு ரயிலில் புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு சீர்காழி சென்றடைந்தார். அவருக்கு ரயில் நிலையத்தில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், இன்று (மார்ச் 4) கால 10 மணிக்கு புதியதாக கட்டி முடிக்கப்பட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தரைத்தளம் உள்ளிட்ட 7 மாடி கட்டிடமாக பிரம்மாண்டமாக ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உள்ளிட்டோர் பூங்கோத்து கொடுத்து வரவேற்றனர்.
முதலமைச்சருடன் அமைச்சர்கள் மெய்யநாதன், எ.வ.வேலு, ரகுபதி, டி.ஆர்.பி.ராஜா, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அன்பில் மகேஸ் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.