பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை... சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜன.6ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தொடரின் போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் உரையாற்றாமலே சிறிது நேரத்திலேயே வெளியேறினார். இரண்டாவது நாள் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
மூன்றாவது நாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக யார் அந்த சார்? என்னும் பேட்ஜை அணிந்துகொண்டு வந்து எதிர்க்கட்சியினர் அண்ணா பல்கலை விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இன்று சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கும் வகையில், சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவையில் தாக்கல் செய்தார். அதன்படி பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். குறிப்பாக 5 ஆண்டுகளுக்கு பிணை கிடையாது.
சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்த முதலமைச்சர் “பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது; குற்றமிழைப்போர் மீது தயவு தாட்சயமின்றி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது ” என தெரிவித்தார். இந்த சட்டத்திருத்தம் மீதான விவாதம் நாளை நடைபெற உள்ளது.