"சர்வாதிகாரத்தை திருப்பி அடிக்க துணிந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" - மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு
சர்வாதிகாரத்தை திருப்பி அடிக்க துணிந்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் சென்னை மயிலாப்பூர் பகுதியில் தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த பரப்புரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பரப்புரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது,
"சர்வாதிகாரத்தை திருப்பி அடிக்க துணிந்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த ஜனநாயக தேரை இழுப்பது நம்முடைய கடமை. ஒரு ரூபாய் கொடுத்தால் மத்திய அரசு 29 பைசா கொடுக்கிறது. அந்த 29 பைசாவில் கோடி மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். மத்திய அரசு மீனவர்களுக்காக இதுவரை எந்த திட்டங்களையும் செய்யவில்லை.
அண்ணன், தம்பி போல் வாழும் நம் எல்லோருக்கும் இடையே சண்டை மூட்டிவிட பார்க்கிறது மத்திய அரசு. நாடாளுமன்றத்தில் நம் குரல் கேட்க வேண்டும் என்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன். நம் நாட்டை நினைவில் வைத்துக் கொண்டு நீங்கள் வாக்கு செலுத்த வேண்டும். மீண்டும் இந்த பகுதிக்கு வருவேன். உங்களுக்காக நன்றி சொல்ல. "
இவ்வாறு மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.