கிராண்ட்மாஸ்டரான செஸ் வீரர் இளம்பரிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபன் செஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் ஏ.ஆர்.இளம்பரிதி கலந்து கொண்டு விளையாடினார். இந்த போட்டியில் செஸ் வீரர் ஏ.ஆர்.இளம்பரிதி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன்மூலம் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும் 16 வயதான இளம்பரிதி பெற்றார். இதனிடையே இளம்பரிதிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "சதுரங்கத்தில் தமிழ்நாட்டின் 35வது கிராண்ட்மாஸ்டராக இளம்பரிதி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டின் சாம்பியன் கிரீடத்தில் அவர் மற்றொரு ரத்தினத்தைச் சேர்த்துள்ளார். தமிழ்நாடு சதுரங்கத்தில் சூரியன் உதிக்கும் போது இன்னும் பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகின்றனர்." என்று பதிவிட்டுள்ளார்.
 
 
            