#J&K-ல் வெற்றி பெற்ற காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
90 சட்டப்பேரவை தொதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு, செப். 18, செப். 25 மற்றும் அக்.1 என 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளைவிட அதிகமாகும்.
10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல் என்பதாலும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் என்பதாலும் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் நேற்று ஹரியானாவிற்கும், ஜம்மு-காஷ்மீருக்கும் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்றது.
ஆரம்பத்தில் ஹரியானாவில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்த நிலையில், பின்னர் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனையடுத்து உமர் அப்துல்லா முதலமைச்சராக பதவியேற்பார் என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் வெற்றிப்பெற்ற காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
“அமோக வெற்றி பெற்ற ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கும், JKNC-INC கூட்டணிக்கும் வாழ்த்துகள்! இது இந்தியாவிற்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி. மத்திய பாஜக அரசால் பறிக்கப்பட்ட மாநில அந்தஸ்தையும், கண்ணியத்தையும் திரும்ப பெறுவதற்கான தீர்ப்புதான் இது. இந்த தருணம், காஷ்மீர் மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் ஒரு நியாயமான, உள்ளடக்கிய எதிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.