“கெவி திரைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பார்க்கவேண்டும்” - இயக்குநர் அமீர் கோரிக்கை!
கெவி திரைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பார்த்து கெவி பகுதிக்கு சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என இயக்குநர் அமீர் கோரிக்கை எழுப்பியுள்ளார்.
கெவி திரைப்படத்தின் சிறப்பு தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குனர் அமீர் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது,
“கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் 2 மணிநேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கெவி என்ற கிராமத்தில் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்வதற்கு 7 மணி நேரம் ஆகிறது. அந்த கிராமத்தில் கடந்த மாதத்திற்கு முன்பு ஒரு பெண் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு குறித்த நேரத்தில் செல்லாமல் உயிரிழந்தார். சுதந்திரம் பெற்று இவ்வளவு காலம் கடந்தும் இன்னும் இது போன்ற சிரமங்களை அனுபவிக்கிறோம்.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்னும் ஆற்றைக் கடந்து மருத்துவமனைக்கு செல்வது, கல்வி கற்க செல்வது, உணவு பொருட்களை வாங்க செல்வது என்ற நிலை இருக்கிறது. திரைப்படம் வெற்றி பெறும் இடத்தில் உள்ளது. புதிய நடிகர்களோ, இயக்குனர்களோ முதல்முறை படத்தை தயாரித்தால் அந்த படத்தை வெளியிடுவதற்கு முன்பு அனுபவம் வாய்ந்த இயக்குநர்களை வைத்து சரிபார்க்க வேண்டும். அப்படி சரி பார்த்தால் தான் அந்த திரைப்படத்தின் கருத்து மக்களிடையே சென்று வெற்றி அடையும்.
ஏசியன் விளையாட்டு போட்டி, ஒலிம்பிக் போட்டி நடத்துவது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடத்துவதற்கு ஒரு கிராமத்தை உருவாக்குகிறார்கள். ஆனால் ஒரு கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கிறார்கள். இத்திரைப்படத்தில் வெற்றி அரசியலில் எதிரொலிக்க வேண்டும். இந்த திரைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்க்க வேண்டும். மேலும், அமைச்சர்களும் இதனை பார்த்து அந்த பகுதிக்கு சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.