முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங். மேலிட பொறுப்பாளர் அஜய்குமார் திடீர் சந்திப்பு!
தமிழ்நாடு வந்துள்ள காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய்குமார், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை இன்று சந்தித்தார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை ஜன.28-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழ்நாடு பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு வந்துள்ள காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய்குமார் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்தார். திமுக-காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் விஜயகுமார் கூறியதாவது:
"கடந்த 10 ஆண்டுகளில் ஜனநாயகத்திற்கு முடிவுரை எழுதி வருகிறது பாஜக. பெட்ரோல் விலை 70 ரூபாயில் இருக்கும் போதும், சிலிண்டர் விலை ரூ 400 ல் இருக்கும் போதும், பிரதமர் மோடி கண்டித்து போராடினார். தற்போது பெட்ரோல், பால்,சிலிண்டர் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது?
10 ஆண்டுகளில் பொதுமக்களின் சம்பளம் அதே நிலையில் உள்ளது. ஆனால் விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது. எங்கும் வேலைவாய்ப்பில்லை. விவசாய நலனுக்காக கொடுக்கப்படும் கடனால் ரூ.45,000 கோடி தனியார் இன்சுரன்ஸ் கம்பெனியே பயன்படுத்துகிறது. விவசாயிகள் பயன்பெறுவதில்லை.
ED, CBI போன்ற விசாரணை அமைப்புகள் பாஜக அலுவலகத்திற்கு தங்கள் அலுவலகத்தை மாற்றி விடலாம். துபாய் செல்ல முடிந்த பிரதமர் மோடிக்கு ஏன் மணிப்பூர் செல்ல முடியவில்லை? பிரதமர் மோடி ஏன் செய்தியாளர்களை சந்திப்பதில்லை? காங்கிரஸ் ஜனநாயகத்தை நம்புகின்றது.
சிஏஜி அறிக்கை ஏன் முறையாக வருவதில்லை? ஆர்எஸ்எஸ் திட்டத்தின் படி பிரதமர் மோடி செயல்படுகின்றார். பணமதிப்பிழப்பு காரணமாக பல லட்சம் மக்கள் பல கிலோ மீட்டர் நடந்தே செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது.
பிரதமர் மோடி ஏழை மக்களுக்கு பணம் கொடுக்கமுடியவில்லை. ஆனால் திவால் ஆவதாக கூறும் தொழிலதிபர்களுக்கு கோடிகணக்கில் பணத்தை வாரிக் கொடுக்கிறார். உ.பி கோயில் திறப்பு விழாவில் கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். பொதுமக்கள் பங்கேற்கவில்லை.
இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தோம். மிகவும் மகிழ்ச்சிகரமான சந்திப்பு. அவரது தலைமையில் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும், தமிழ்நாட்டு மக்களை நான் நம்புகின்றேன். சரியான அடியை RSS கொள்கைக்கு தமிழ்நாட்டில் கொடுத்து வைத்துள்ளனர். தமிழ்நாடு எப்பொழுதும் ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு இடம் அளிக்காது" என்று கூறினார்.
தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:
"உச்ச நீதிமன்றத்தில் முக்கியமான வழக்கு நடைபெற்று வருவதால் அதில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் விஜய் தரணி. 2 நாட்களுக்கு முன்பாக தலைமையிடம் பேசினார். காங்கிரஸ் கட்சி கடல் போல. அதில் சலசலப்பு இருக்கத்தான் செய்யும். அனைவரையும் அரவணைத்து செல்வோம்." என தெரிவித்தார்.