தூத்துக்குடியில் கனிமொழிக்கு வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு தூத்துக்குடி காமராஜர் மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 20 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதையடுத்து, பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக வேட்பாளர்களையும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட போது தூத்துக்குடி காமராஜர் மாக்ர்கெட் பகுதிகளில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தார்.