உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு - இளம் வழக்கறிஞர்களுக்கே இனி முன்னுரிமை!
மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வழக்குகளைப் பற்றி முறையீடுகளை நேரடியாக வைக்கக்கூடாது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வழக்குகளுக்கான முறையீடுகளை இளம் வழக்கறிஞர்களே (ஜூனியர் வழக்கறிஞர்கள்) வைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்தது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் விளக்கம் கோரிய வழக்கில், மகாராஷ்டிரா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜரானார். அவர், இந்த வழக்கு தொடர்பான முறையீட்டைச் செய்ய அனுமதி கோரினார்.
ஆனால், இதற்கு நேரடியாக மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி, "இந்த நீதிமன்றத்தில், வழக்குகள் தொடர்பான எந்த ஒரு முறையையும் இளம் வழக்கறிஞர்களே வைக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்த அறிவுறுத்தலின்படி மூத்த வழக்கறிஞர்கள் முறையீடுகளை வைக்க வேண்டாம். அவ்வாறு வைக்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படாது" என்று மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் இந்த நடவடிக்கை, இளம் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு முக்கிய முடிவாகப் பார்க்கப்படுகிறது. மூத்த வழக்கறிஞர்கள் எப்போதும் முக்கியமான வழக்குகளில் ஆஜராகி, வழக்கின் போக்கு முழுவதையும் தீர்மானிப்பார்கள். இதனால், இளம் வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றத்தில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.
இந்த நிலையில், இளம் வழக்கறிஞர்கள் முறையீடுகளை வைப்பதன் மூலம், அவர்களின் வாதத் திறமைகள் மேம்படும் என்றும், நீதிமன்ற நடைமுறைகள் குறித்து அவர்கள் நேரடியாக அனுபவம் பெறுவார்கள் என்றும் நம்பப்படுகிறது. மேலும், வழக்குகளின் சுருக்கமான அம்சங்களை விரைவாக நீதிபதிகளின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்கும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கக்ப்பட்டுள்ளது.